Tuesday, February 16, 2010

[பண்புடன்] இன்னும் இன்னுமொரு காதல் கதை..,

நீலத்தை தவிர ஏதுமற்ற வானத்தில்
ஒற்றை முகமாய் பிரகாசிக்கும்
சுற்றிய நூறு மினுக்கெட்டான்களில்
எட்டிப் பறித்ததெது
பட்டென இருள்கிழித்து மறையும்
ஒற்றைப்பூவின் பெயர் தேடச்செய்து
புவித் தொடாமல் எரிந்து மறைந்ததெது?
எவர் மத்தாப்பின் சிதறல்
ஆகாசம் நிறைக்கிறது
எவர் கனவின் இருள்
மறைந்து ஒளிர்கிறது?

 
மஸ்கட்டிலிருந்து கடைசியாய் கிளம்புவதற்கான டிக்கெட் கையில் கிடைத்தவுடனேயே பொண்டாட்டிக்கு சொல்வதற்காய் தொலைப்பேச நினைத்தவன், திடிரென முன்னால் நின்றால் எத்தகைய ஆனந்த அதிர்ச்சியை அடைவாள் அவள் என்கிற கற்பனையில் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.
 
கிட்டத்தட்ட எட்டு மாத கர்ப்பத்திலிருந்தவளை ஊரில் விட்டு வந்தவன், குழந்தைப்பிறந்த ஒன்பது மாதங்களாகிவிட்டது. தினமுமான தொலைப்பேசி உரையாடல்களில் கடைசியாய் வெடித்து அழுது திட்டி முடிப்பதும், ஒரு வாரத்தில் உன் முன் நிற்பேன் என்கிற வாய்ச்சவடாலுமாய் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தேன்.
 
உன் பொண்ணு,பொண்ணுன்னு போன்ல கொஞ்சுறதை நிறுத்திட்டு இங்க வந்து வச்சுப்பாரு, ஒரே நாள்ள ஓடிப்போயிடுவ. அவ எல்லாரும் தூங்கிறப்போதான் முழிச்சிட்டு விளையாடுறா, அவ முழிச்சுட்டு இருக்கிறப்போ தூங்கினா கத்தி ஊரைக்கூட்டுறா. முன்னேயாவது படுத்துட்டு இருந்தா, இப்போ ஒரு வாரமா எப்படியாவது தட்டு தடுமாறி நடக்க ஆரம்பிச்சிட்டா, டிவி போட்டா பாட்டு இருக்கிற சானலா வைக்கனும் வேற எதைப்பார்க்க நினைச்சாலும் விட மாட்டேன்றா. எங்க படுக்க வச்சாலும் துறு துறுன்னு நகர்ந்துப் போயிடுறா. அவ கூட ஓடி உக்கார்ந்து நடந்து பால்கொடுத்துன்னு ஒரு ஒரு நாளும் என் உயிரே போயிடுது. நீ என்னடான்னா அங்கே உட்கார்ந்துக்கிட்டு, எம்பொண்ணு எம்பொண்ணுன்னு பீத்திக்கிட்டு இருக்கே. பொண்ணு வந்ததிலிருந்து நானும் பார்த்திட்டு தான் இருக்கேன்.மூச்சுக்கு முன்னூறு வாட்டி பொண்ணு பொண்ணுன்னு சொல்றவன் ஒரு நாளிலேயாவது உன் உடம்பு எப்படி இருக்கு, ஒழுங்கா சாப்பிட்டீயானு ஒரு வார்த்தை இல்லை. பொண்ணுக்கு அதைக்கொடுத்தியா இதைக்கொடுத்தியான்னு மட்டும்தான் அக்கறை. நடத்துடா நான் பார்த்துக்கிறேன் என்றெல்லாம் கத்திக்கொண்டிருப்பவளை நினைத்துப்பார்க்கிறேன்.
 
தேவதைக்கதைகளில் வருகிற வெண்ணிற ஆடையனிந்த சிறகுளுடனான தேவதையை கேட்டதெல்லாம் தருகிற தேவதையை எல்லோருக்குமே வேண்டுமென்கிற உணர்விருக்கும்.அத்தகைய தேவதைதான் இவள், குறையாத கருணை நிறைத்து வைத்தவள். எல்லா வசதிகளின் உச்சத்தில் இருக்கையிலும் அடுத்த வேலையை நோக்கி அலைந்துக்கொண்டிருந்தவனை காதலித்திட்ட கொடுமைக்காய் வீட்டை விட்டு வந்து திருமணம் செய்து கொண்டவள். ஒரு நாள் கூட நான் திட்டியோ , கத்திக்கொண்டிருக்கையிலோ முகம் சுளித்தவளில்லை. எல்லா திட்டுகளுக்கும் மென்சிரிப்பாய் என்னடா முடிஞ்சிட்டா இல்லையா? இதையெல்லாம் விட்டுட்டே என்று எடுத்துக்கொடுப்பாள்.என் கோபமெல்லாம் மறந்துப்போயி அவளை நோக்க, போடா போயி வேலையைப்பாரு எப்பப்பார்த்தாலும் சண்டை ஈவினிங் சீக்கிரமா வா, பீச்சுக்குப்போகலாம் என்பாள். எனக்கோ இருக்கிற எரிச்சலில் எவன்கூடவாவது போடீ, பீச்சுக்கு என்ன ? எங்க வேணா போ என்பேன். போனில் என்ன சொன்னே, என்பாள் அடுத்த கணங்களில் விழும் திட்டுக்களின் எண்ணிக்கை முடிகையில் என் கோபம் மறைந்து அய்யய்யோ மாட்டிக்கிட்டோமே என்கிற எண்ணம்தான் பெரிதாயிருக்கும். சாயங்காலம் வீட்டுக்குப்போனால் லைட், பேன் என்று எதையும் ஆன் பண்ணாமல் உட்கார்ந்திருப்பாள். என்னடி எப்போ வந்தே என்கையில் ஏன் உயிரோட வந்தேன்னு கேளு, உனக்கு நான் சலிச்சுப் போயிட்டேண்டா, அதான் கண்டபடி பேசுற, நான் எவன்கூட வேணா போவேன்னு நினைச்சு தானே அப்படி பேசுற, உன்னை நம்பி என் வீட்டை விட்டு வந்தேண்டா அதான் இப்படி பேசுற என்று கத்தித்தீர்ப்பாள். கொஞ்ச நேர கெஞ்சல்களில் இறங்கிவருகிறவளாயிருக்க மாட்டாள். எல்லா அடம் , அழுகை முடிய நள்ளிரவாகியிருக்கும். கன்னம் தொட்டு, கெஞ்சி நீ இப்படியே இருடி நான் போறேன், ரோட்ல போயிக்கத்துவேன். என் பொண்டாட்டி என்னைக்கொடுமை படுத்துறா, கேட்டுச்சொல்லுங்கன்னு தெருவுல இருக்கிற எவனையாவது கூட்டிட்டி வருவேன் என்கையில், கண்கள் பொங்கும் சிரிப்பை வெளிக்காட்டாமல் போடா நாயே என்பாள். மெல்ல மெல்ல விடியும் எங்களின் கோப வானம்.
 
பருவத்தில் வந்த காதலாயில்லை, இவள் எல்லாவற்றிலும் மிக தீர்க்கமான முடிவுகளோடும் தீராத அன்போடும் வாழ்பவள். எனக்கோ யோசனைகள் திட்டமிடல்கள் என்கிறவைகளோடு எந்த தொடர்புமிருந்ததில்லை. ஒரு அரைகுறை சராசரிக்கும் , மிகத்தீர்மானங்களுடனான புத்திசாலிக்குமான காதல். என் நண்பர்கள் வட்டாரத்தில் எல்லோரும் பொறாமைத்தீ எரிய சொல்வார்கள், நியூட்டனின் மூன்றாம் விதியோட எடுத்துக்காட்டு நீங்கதாண்டா, ஒரு பக்கம் அழகு, அறிவு , நல்ல வேலை, நிறைய சம்பளம்னு ஒரு பொண்ணு, இன்னொரு பக்கம் மொக்கையான, வாங்கிற சம்பளத்தில படம் போடாத புத்தகங்களையும், பசிக்கிதுன்னு சொல்லி ஏமாத்துறவனுக்கு சாப்பாடும் , கூட பார்சலும் வாங்கித்தர லூசு . எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் உண்மைதாண்டா மாப்ளே என்கிறவனின் முகத்தில் கேலியைத்தாண்டிய பொறாமை இருக்கும்.
 
காதலிக்க ஆரம்பித்த நாட்களில் நான் நண்பர்களோடு வடபழனியில் தங்கியிருந்தேன். கூட இருந்தவர்கள் எல்லோருமே சாப்ட்வேர் ஆசாமிகள். அந்த அறையில் குறைந்த சம்பளத்தில் அதிக செலவாளியாய் நின்றது நான் மட்டும்தானாயிருக்கும். இவளுக்கோ என்னை ஒரே நாளில் கோடீஸ்வரத்தோரணையுடையவனாக ஆக்கிடும் திட்டம் இருந்திருக்க வேண்டும். அங்கிருந்த என் நண்பர்களின் பொறாமையைத் தூண்டி பாருடா நீயும் சராசரி ஆளில்லை என்கிற நம்பிக்கையை எனக்குள் ஊட்ட யோசித்தாளோ என்னமோ, ஒரே வாரத்தில் பதினாறு ஆயிரத்திற்கு சட்டை பேண்ட் என வாங்கிக்கொடுத்திட்டாள். எனக்கோ எதை போடுவது எதை விடுவது எனத்தெரியவில்லை. அவனவன் காலையில் அலுவலகம் போக துவைத்த சட்டை பேண்ட்களுடன் அயர்ன் செய்து கொண்டிருக்க நானோ, புதியதாய் கவரிலிருந்து பிரித்து பின் , அட்டைப்பெட்டியை கசக்கி எறிவேன். இப்படி நிகழ்ந்த மாபெரும் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் நண்பர்களின் கூட்டம் பொருமிக்கொண்டிருக்க, ஒரு மாலையில் என்னை அழைத்தவள் இன்னும் பத்து நிமிடத்தில் உன் அறைக்கு வருவேன், உன் நண்பர்க்ள் எல்லோரும் அங்கிருக்க வேண்டும் அதுதான் முக்கியம் என்றாள்.
 
அது ஒரு ஞாயிறின் மாலை , அவனவன் டீவியின் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக படத்தில் மூழ்கியிருக்க எனக்கு செல்பேசினாள். நான் மெதுவாக டேய் என் ஆளு வந்திருக்கா, உங்களை எல்லாம் இண்ட்ரீடியூஸ் பண்றேன் என்றேன். எவனும் என்னை சட்டை செய்யாமல் போடா , கனவு காணாதே என்று டீவியில் மூழ்கிப்போனார்கள்.
இவள் வாசல் வந்து கதவைத்தட்டினாள்.
 
வெகு கம்பீரமாக உள்ளே வந்தவள், என் பக்கத்தில் வந்து ஜோடியாக நின்று கொண்டாள். அவனவனுக்கு வேர்த்து விறுவிறுக்க வழிய ஆரம்பித்தார்கள். நானோ வானுலக தேவனாக இது அவன் , அது இவன் என்று பெயர் அறிமுகங்களைப் பேசிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் இருந்தவள் என்னை வந்து பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ணுடா என்றாள்.
 
அடுத்த அரை மணிநேரத்தில் திரும்பி வந்தவனுக்கான மரியாதையை நீங்கள் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருப்பீர்கள்.
 
ஏண்டி என்னை உனக்குப்பிடித்தது என்கையில் , " நீ நீயாவே இருந்தேடா, ஒரு கொழந்தை மாதிரி, அடம் , அழுகைன்னும், கோபம் வந்தா எதையும் ஏறெடுத்தும் பார்க்காம வீசியடிக்கிற கொழந்தையா இருந்தே என்பாள்.
 
அந்த நிமிடத்தில் ஓடிப்போய் அவளின் கன்னத்தைக்கிள்ளி முத்தமிட்டுக்கொள்வேன். அவளின் கைவிரல்களை கோர்த்துக்கொண்டு ஏதாவது பேசிக்கொண்டே இருப்பேன். கல்யாணம் ஆகி இத்தனை மாசமாச்சு. இன்னுமாடா நான் சலிக்கலை உனக்கு. என்னமோ நேத்து கல்யாணம் ஆகினவன் மாதிரி இருக்கேடா நீயென்பாள். உனக்கு சலிச்சிடுச்சாடி என்கையில் ஆமாம், அதான் புதுசா யாரையாவது லவ் பண்ணலாம்னு யோசிக்கிறேன் என்பாள்.
 
எல்லா சண்டைகளின் முடிவிலும் என்னை யாரும் தொடக்கூடாது என்கிறதுதான் இருவருக்குமான எல்லைக்கோடு. எத்தனை நிமிடங்கள் நீடிக்கும் என்றெல்லாம் யோசிக்கக்கூட முடியாது. இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஒரு புறமாய் முதுகு காட்டி உறங்குபவளின் அழகு , விடியற்காலையில் என் மார்போடு கட்டிக்கொண்டிருப்பாள். எழுந்து டீ போட்டு வருகையில், சண்டை போடுறான் பொண்டாட்டிக்கிட்டே, இப்போ யாருக்கு நஷ்டமாச்சு என்று கண்ணடிப்பாள்.
 
கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் தினமும் வாந்தி , எதை தின்றாலும் வாந்தி நிற்காத வாந்தி. எனக்கோ என்ன செய்வதென எதுவும் தெரியாமல் புலம்பித்தவிப்பேன். இருடா, குழந்தை வேணும்தானே, அப்படிதான் இருக்கும் , நீ பயப்படாமல் இரு என்பாள். பெரிதாகத்துவங்கிய வயிற்றில் எங்கள் குழந்தையின் அசைவுகளை உட்கார்ந்து ஆராய்வதுதான் எங்களின் முழுநேர வேலை. இப்போ பொண்ணு சோம்பல் முறிக்கிறா, என்னடி இன்னும் சாப்பிடலன்னா எட்டி உதைக்கிறா என்கிறதாய் ஏதேதோ சொல்லிக்கொண்டிருப்பாள்.
 
ஆறு மாத கர்ப்பக்காலத்தில் நானே கர்ப்பத்தை சுமந்தலைவதாய் எண்ணிக்கொள்வேன். அவளை நகர விடாமல் அதை செய்யாதே , இதை செய்யாதே என மிரட்டிக்கொண்டிருப்பேன். பெரிய இவன், புருசன்னு நிருபிக்கிறாராமாம் என்று முகம் கொள்ளா சிரிப்போடு கிண்டல் செய்துக்கொண்டிருப்பாள்.
 
எட்டாவது மாதத்தின் ஆரம்பத்தில் வேலை பொருளாதார பிரச்சனைகளின் காரணமாய் வெளிநாட்டு வேலையை ஒப்புக்கொள்வதா? பொண்டாட்டி பிரசவம் பக்கத்தில் இருந்து பார்ப்பதா என்கிற மனச்சிக்கலில் குமைந்துப்போகையிலும் அவள்தான் சொன்னாள், போடா போயி பொறக்கப்போற பொண்ணுக்கு நிறைய தங்கம் வாங்கிட்டு வாடா, நான் பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாமல் போடா என்று அனுப்பி வைத்தாள். காலத்தின் சுழற்சியில் குழந்தைப் பிறந்த நாளில் நான் அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்குமாய் வெறிப்பிடித்து அலைந்து கொண்டிருந்தேன்.
 
இறங்கத்துவங்கியது விமானம், சென்னை அதிகாலையில் பனிமூட்டமாய் மூடிக்கிடக்க, சரெலென்ற பாய்ச்சலில் வந்திட்டது சென்னை.எல்லோருக்கும் முன்னால் மனம் ஓடத்துவங்க, வேகமாய் நடைப்போடத் துவங்கினேன்.
 
எல்லாம் முடிந்து வாசலை வந்தடைந்தவன், மெதுவாய் நினைவுக்குக்கொண்டு வந்தேன். நான் படித்த கதையின் நாயகன் பொண்டாட்டியைத்தேடி வீட்டிற்கு ஓடிக்கொண்டிருக்கிறான். சென்னையின் பரபரப்பு என்னை ஏதோ செய்தது. அவள் இன்னேரம் கணவனின் அன்பில் கரைந்திருப்பாள் , அவன் தன் குழந்தையைக் கொஞ்சி களைத்திருப்பான். என்றெல்லாம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தவன்.
 
மெதுவாய் எரிச்சலுற்று , செல்போனில் நண்பனை தொடர்புக்கொண்டேன், அவனின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பக்கத்திலிருந்த ஒரு பெண்ணை வெறிக்கத்துவங்கினேன். சற்று நேரத்திற்கு பின்னான முயற்சியிலும் சுவிட்ச் ஆப் என்றது போன்.

--
-  கென் -

www.thiruvilaiyattam.com

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment